சில உறவுகள் பொய்யென தெரியும்போது இதை கேள்!

சில உறவுகள் பொய்யென தெரியும்போது இதை கேள்!

குறளின் குரல்! – திருக்குறள்

பதிவு எண்: 350  அதிகரம்: நிலையாமை  குறள் எண்: 350

சில உறவுகள் பொய்யென தெரியும்போது இதை கேள்!

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை

விளக்கம்: நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணும் அற்ப அறிவு இழிவானது!

நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு என்னவென்றால், சில பொய்களை உண்மை என்று ஆழமாக நம்புவோம். ஆனால், சில உண்மைகளை உண்மையாகவே துளியளவுகூட நம்ப மாட்டோம். இன்றிருக்கும் சில உண்மைகள் என்றுமே உண்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

இன்று நமக்கு தெரிந்த சில பொய்கள் எப்போதுமே பொய்யாகத்தான் இருக்கும் என்று கருதுவோம். இந்த தவறுகள் அனைத்துமே, நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும். நம்முடன் பயணிக்கக்கூடிய சில உறவுகள், இடைப்பட்ட வாழ்க்கையில் பொய்யென தெரியும் பொழுதோ, அல்லது நாம் நம்பிக் கொண்டிருக்ககூடிய பொய்கள் உண்மை என்று தெரியும் பொழுதோ, நம்முடைய வாழ்க்கையில் ஒரு விதமன சங்கடத்தை நாம் எதிர்கொள்வோம்.

இவ்வளவு நாட்களாக இதை தெரியாமல் வாழ்ந்துவிட்டோமே, இத்தனை நாட்களாக இவர்களை நம்பி வாழ்ந்துவிட்டோமே என்று நினைத்து நம்முடைய மனதை நாமே நோகடித்துக் கொள்வோம். நம்முடைய வாழ்க்கையில் நாம் நம்பக்கூடிய உண்மைகளில் சில மாறக்கூடியது. சில உண்மைகள் நம்மை மாற்றக்கூடியது. ஒரு கவிஞருடைய வரியான ‘மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று, இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று’ எதார்த்த வாழ்க்கையை மிகவும் அழகாக சொல்லும்.

Reflection Of Finger In A Mirror
சில உறவுகள் பொய்யென தெரியும்போது இதை கேள்!

நாம் நம்பிக் கொண்டிருக்கக்கூடிய உறவுகளோ, நாம் நம்பிக் கொண்டிருக்கக்கூடிய உண்மைகளோ, பொய்யென்று தெரியும்பொழுது, மிகப்பெரிய துன்பங்களை நம் மனம் அனுபவிக்கும். ‘நேற்று வரை நான் நம்பிய உண்மை, இன்று பொய்யாக போனதே’ என்று பலர் மனம் வருந்துவார்கள். நேற்று பழமாக இருந்த ஒன்று, இன்று அழுக துவங்குகின்றது என்றால், அது பழத்தின் தவறா? அல்லது காலத்தின் தவறா? இல்லையெனில், சூழலின் தவறா? என்பதை நம்மால் உறுதியாக கூற முடியாது. அது தான் ஒரு பழத்தின் பயணம்.

அதுதான் படைப்பின் இயல்பு. இந்த எதார்த்த இயல்பை புரிந்துக் கொண்டோமானால், நம்மோடு பழகும் சிலர், இடையில் மனம் மாறி, நமக்கு எதிராகவோ, விரோதமாக மாறினார்கள் என்றால், நாம் அவர்களை நினைத்து வருந்த மாட்டோம். அவர்களிடமிருந்து நாம் கடக்க பழகிவிடுவோம். ஒருவர் நம் மீது அன்பாய் இருக்க வேண்டும் என்றும், நமக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றும் நினைப்பது ஆசையாக இருக்கலாம். ஆனால், என்றைக்குமே நம்மை ஒருவர் ஒரே விதமாக நேசிக்க வேண்டும், நமக்கு காலம் முழுவதும் உண்மையாக இருக்க வேண்டும் என்றும் நினைப்பது பேராசையே ஆகும்.

நம்முடைய வாழ்க்கையில் ‘ஆசை’ இருக்கலாம், ஆனால் ‘பேராசை’ இருக்கக் கூடாது. நம்முடைய வாழ்க்கையே நிலையில்லாதது எனும்பொழுது, நம்முடன் பழகக்கூடியவர்களோ அல்லது நாம் சந்திக்கக்கூடிய காரியங்களோ மாறும்பொழுது அந்த மாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை நம்முடைய மனதில் ஏற்படுத்தக்கூடாது. யாரோ சிலருக்காகவோ, அல்லது ஏதோ சிலவற்றிற்காகவோ நம்முடைய வாழ்க்கையை நாம் வெறுத்து ஒதுக்கக் கூடாது.

நம்முடைய வாழ்க்கையில், ‘எந்தக் காரியங்களும் நிலைக்காது’ என்ற அடிப்படை புரிதல் நமக்கு இருக்கும்பொழுது, எந்த ஒரு காரியத்தை குறித்தும் நாம் மனம் வருந்த மாட்டோம், மனம் கலங்க மாட்டோம். நம் வள்ளுவர் ‘நிலையாமை’ என்ற தலைப்பிற்கு கீழ், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே, இந்த அறிவுரையை நமக்கு கொடுத்திருக்கின்றார்.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை

என்று. அதாவது, நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணும் அற்ப அறிவு இழிவானது. உங்களுடைய தனிமையில், அமைதியான உணர்வில், இந்தக் கருத்துகளை மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். இன்னும் ஆழமான சில கருத்துகள் உங்களுக்கு விளங்க ஆரம்பிக்கும். நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் நாம் கற்க வேண்டும், ஒவ்வொன்றையும் நாம் கடக்க வேண்டும்.

நன்றிகள்!

சில உறவுகள் பொய்யென தெரியும்போது இதை கேள்! : click here

யாருக்கும் கட்டுப்பட்டு இருக்காதே! : click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *