போலியாக நடிப்பவர்களிடம் நீயும் போலியாக பழகு!

போலியாக நடிப்பவர்களிடம் நீயும் போலியாக பழகு!

குறளின் குரல்! – திருக்குறள்

போலியாக நடிப்பவர்களிடம் நீயும் போலியாக பழகு!

பதிவு எண்: 294      அதிகாரம்: கூடா நட்பு         குறள் எண்: 830

போலியாக நடிப்பவர்களிடம் நீயும் போலியாக பழகு!

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு

அகநட்பு ஒரீஇ விடல்

விளக்கம்: பகைவர் நண்பராகும் காலம் வரும்பொழுது, முகத்தளவில் நட்புக் கொண்டு, அகத்தில் நட்பு நீங்கி, வாய்ப்பு கிடைத்தபோது அதையும் விடவேண்டும்.

இந்தக் குறள் வழியாக வாழ்க்கைக்கு தேவையான ஆழமான விஷயத்தை மிகவும் எதார்த்தமாக சொல்லியிருக்கின்றார் நம்முடைய வள்ளுவர். நம்முடைய வாழ்க்கையில் நாம் நிறைய விஷயங்களை பாதுகாப்போம். அதற்கு பல விதமான முயற்சியில் நாம் ஈடுபடுவோம். வீட்டிற்கு ஒரு விதமான பாதுகாப்பு, வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களுக்கு ஒரு விதமான பாதுகாப்பு. மிக முக்கியமாக, ‘நம்முடைய அலைபேசி’ என எல்லாவற்றையுமே நாம் பாதுகாப்போம்.

அது தவறும் இல்லை. ஆனால், இந்த எல்லாவற்றையும்விட, அதிகமாக பாதுகாக்கப்பட வேண்டியது, ‘நம்முடைய மனம் மற்றும் நம் வாழ்வு’. நம்முடைய வாழ்க்கையில், இரண்டு விதமான தவறை நாம் மிகவும் துணிந்து செய்வோம். ஒன்று, சிலரோடு அதிகமாக நெருங்கி, நம்பிக்கை வைத்து பழகுவது. மற்றொன்று, சிலரை நம்முடன் அதிகம் நெருங்கி பழகவிடுவது. நாம் வாழக்கூடிய வாழ்க்கை, நமக்கு பலவிதமான பாடங்களை கற்றுத் தரும். அதில் ஒன்று தான், ‘யார் யாரிடம் நாம் பழக வேண்டும், எந்த அளவிற்கு பழக வேண்டும்’ என்ற பாடம்.

தகுதியற்ற சிலரை நாம் நம்முடைய நண்பர்களாக ஆக்குவதும், உறவினர்களாக ஆக்குவதும் தான் நாம் செய்யக்கூடிய முட்டாள்தனங்களிலேயே, மிக மோசமான முட்டாள்தனம். நம்முடைய வாழ்க்கை சூழ்நிலையில், யார் நம்முடைய நண்பர்கள், யார் நம்முடைய எதிரிகள் என்ற வித்தியாசமே இல்லாமல் இருக்கும். ஏனென்றால், எல்லோரிடமும் ஒரு விதமான முகமூடிகள் மறைந்திருக்கும்.

ஒரு சில நேரங்களில், ஒரு சில மனிதர்களை நம்முடைய நண்பர்களாகவும், நமக்கு நெருக்கமானவர்களாகவும் நாம் ஏற்றுக்கொள்வது நம்முடைய முட்டாள்தனம். ஆனால், அந்த முட்டாள்தனத்தை நாம் செய்ய வேண்டும். ஒரு சில நேரங்களில், ஒரு சிலரிடம் நாம் முட்டாளைப் போல நடிக்க வேண்டும்.

வேறு வழி இல்லை. சிலர் போலியான முகமூடியோடு நம்முடன் பழகும்பொழுது, நாமும் அப்படி தான் அவர்களிடம் இருக்க வேண்டும். அதாவது, நம்மை ஏமாற்றும் நோக்கத்திலோ அல்லது, வேறு ஏதாவது ஆதாயத்திற்காகவோ நம்மிடம் போலியாக நடிக்கக்கூடிய ஒரு சில மனிதர்களிடம், நாமும் போலியாக தான் நடிக்க வேண்டும்.

நம்மை ஒருவர் சிரித்து பேசி, பழகி ஏமாற்றுகிறார்கள் எனும்பொழுது, நாமும் சிரித்து பேசி பழகலாம். ஆனால், ஏமாற்ற வேண்டாம். எந்தவொரு நோக்கத்திற்காகவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் அறமற்ற எந்த செயல்களிலும் நாம் ஈடுபடக் கூடாது.

ஒரு சில மனிதர்கள் நமக்கு எதிராகவோ அல்லது நம்மை ஏமாற்றும் நோக்கத்திலோ நம்முடன் பழகும்பொழுது, நாமும் அவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொண்டதைப் போல அவர்களுடன் பழக வேண்டும்(முகத்தளவில்). ஆனால், மனதளவில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.

சிலரிடம் உண்மையாக இருந்து எதிர்த்து நிற்பதைவிட, போலியாக நடித்து நழுவி விடுவது என்பது தான் மிக சிறந்ததாக இருக்கும். தனிப்பட்ட ஆதாயத்திற்காக போலியாக நம்மிடம் யாராவது பழக வருகின்றார்கள் எனும்பொழுது, இந்த அறிவுரையை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு

அகநட்பு ஒரீஇ விடல்

என்ற அறிவுரையை நாம் யோசிக்கும்பொழுது, எதார்த்த வாழ்க்கையில் நிறைய சூழ்நிலைகளை எளிமையாக நம்மால் கடக்க முடியும்.

நன்றிகள்!

போலியாக நடிப்பவர்களிடம் நீயும் போலியாக பழகு! : click here

அரசியல் தந்திரம்! : click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *