உணவில் ஒழுங்கு

உணவில் ஒழுங்கு: உணவு

உடல் இயக்கத்தாலும், உழைப்பாலும் வீணாகும் ஆற்றலை மீட்டுக்கொள்ள உள்ள வழிகளில் மிக முக்கியமானது உணவு. உடலை இயக்குவதற்கு தேவையான ஆற்றல் உணவிலிருந்து கிடைக்கின்றது. உடல் தேவையின் அளவறிந்து, சத்தான, சுத்தமான உணவை அளவோடும், முறையோடும் உண்ண வேண்டும்.

Casserole Dish, Vegetable, Tomato, Yellow Bell Pepper
உணவில் ஒழுங்கு


உணவு மருத்துவம்


வாழும் பொழுது உடல் – மனச் செயற்பாட்டின் காரணமாக உயிராற்றல் செலவாகிக் கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேலாக உயிராற்றல் செலவாகி விடும் போது, உடல் பராமரிப்புக்கான ஆற்றலும் குறைவுபடுகிறது. இதனால் உடலில் சோர்வு உண்டாகிறது. சோர்வைப் போக்கி கொள்ளவும், இழந்த ஆற்றலை மீண்டும் பெறவும் இயற்கையாக பசி எனும் உணர்வு உண்டாகிறது.
எழும் பசியைப் போக்கிக் கொள்ள, ஒருவர் தான் வாழ்ந்து கொண்டுள்ள சுற்றுப்புறச் சூழல்களிலிருந்துதான் உணவைப் பெறுகிறார். இயற்கையிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களை அவற்றின் தரம் கெடாமல் பயன்படுத்துவது கடமையாகும். மேலும் உணவு உட்கொள்ளும்போது உடலைச் சார்ந்த சில இயற்கை நியதிகளை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் உடல் நலம் சிறப்பாக அமையும்; நீண்டகாலம் வாழலாம். வெவ்வேறு இடங்களில் அந்தந்தப் பகுதியின் தட்ப வெப்பத்திற்கேற்ப உணவுப் பழக்கங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன.


தென்னிந்தியாவில் வியர்வையைப் பெருக்கும் வெப்பநிலை நிலவுகிறது. உணவுப் பொருள்கள் நீரை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. குளிர் பிரதேசங்களில் வெப்பத்தைத் தரக்கூடிய வகையில் கோதுமை, பார்லி போன்றவை விளைகின்றன. வெவ்வேறு பகுதிகளில் வாழ்பவர்கள் அங்கங்கு விளைகின்ற காய்களையும், கனிகளையும் உண்பது ஏற்றது ஆகும். அவை தரமாகவும் மலிவாகவும் கிடைக்கும்.

Cereal, Food, Grain, Healthy, Fibres, Oat, Breakfast
உணவில் ஒழுங்கு


தானியங்களையும், காய்கறிகளையும் தேவையான அளவு அன்றாட உணவில் தகுந்த விகிதத்தில் சேர்த்துக் கொள்வது நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Tinned Food) நீண்ட காலத்திற்குக் கெடாமல் இருக்கும் பொருட்டு வேதியியல் பொருட்கள் சேர்க்கப்படுவதால் அவை உடல் நலத்தை ஓரளவு பாதிப்படையச் செய்யும்.
இரும்பு, புரதம், தாது, கொழுப்பு, வைட்டமின்கள் போன்ற சத்துகள் செறிவாக நிறைந்த உணவைத் தேர்வு செய்து உண்பது சிறப்புடையது. நேரத்திகேற்றபடி தகுந்த அளவு உணவு உட்கொள்ளாமல் சத்து மருந்துகள் (டானிக்குகள்) மூலம் சத்துக்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பது தவறான கருத்து. பாரம்பரிய உணவு வகைகளை இழக்காமல் அன்றாட உணவில் பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுவல்கள், முறுக்கு போன்றவற்றைச் சுவைத்துக் கொண்டிருப்பதை விட பழங்களுக்கு முன்னுரிமை தருவது நலம்.


உணவில் அளவு


அளவோடு உண்டால் உடல் உணவைச் செரிக்கும். அதிகமாக உண்டால் உணவு உடலைச் செரிக்கும்.
அனைவருக்கும் மதியம் முக்கால் வயிறு உணவேயன்றி, முழு உணவு தேவை இல்லை. அதன் விவரம்: அன்னமும் காய்கறிகளும் கூடி அரை; மோர், நீர் கூடி கால்; ஆக முக்கால்வயிறு உண்ணவேண்டும். கால் வயிறு இடைவெளி இருக்க வேண்டும். இதுவே செரிமானத்திற்கு அவசியமானதொன்றாகும். வயிறு கொள்ளும் அளவு முழுமையாக உணவை நிரப்பி விட்டால், உணவு முழுமையாகச் செரிக்க முடியாது. சத்துப்பொருட்களும் முழுமையாகப் பிரிக்கப்பட்டு உடலாற்றலாக மாற்றுவதும் பாதிக்கப்படுகிறது.
ஒருவர் எந்த அளவு உணவை உட்கொள்ள வேண்டும் எனில் அடுத்த வேளை உணவு உண்ணுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பசி இருக்க வேண்டும். இதனையே பசித்துப் புசி என்றார்கள். இதுவே உணவு கொள்ள வேண்டிய அளவு ஆகும். பசியெடுத்த பிறகு உண்டால் உண்ட உணவு நல்ல முறையில் செரித்து, உயிருக்கேற்ற ஆற்றலாக மாற வாய்ப்பு அதிகரிக்கும்.

Vegetables, Broccoli, Diet, Fibre, Food, Fresh, Green
உணவில் ஒழுங்கு


உணவில் முறை


சாப்பிட உட்கார்ந்ததும், சிலர் ஒரு பிடி உணவைக் கையில் பிடித்துக்கொண்டு நெற்றி வரை கொண்டு போய்ப் பிறகு சாப்பிடுவார்கள். இதற்கான பொருள் ஓஜஸ் மூச்சு போட்டு விட்டு சாப்பிட வேண்டும் என்பதேயாகும். சாப்பிடும்போது கையில் உணவை எடுத்துக்கொண்டு, பத்துத் தடவை அசுவினி முத்திரை, ஒரு ஓஜஸ் மூச்சு செய்து விட்டு அதன் பிறகு சாப்பிட வேண்டும். ஓஜஸ் மூச்சு போடுவதினால் உணவு காந்தத் தன்மை (Magnetism) பெற்றுவிடும். உடலுக்குத் தேவையான சத்துப் பொருட்களைச் சிற்றறைகள் உறிஞ்சிக் கொள்ளும்.

Fruits on the Table
உணவில் ஒழுங்கு


எளிய உணவு – பொதுவான உணவுமுறை


“காலையிலே புஞ்சை தானியத்தாலான
கஞ்சியொன்று தேங்காயொடு எங்கும் ஓக்கும்
வேலை முடிந்திட்ட பின்னர், பகல் சாப்பாடு
விதவிதமாய்க் கறிவகையோ டரிசிச்சாதம்
மாலையிலே காய்கறிகள், கோதுமையின்
மாக்கொண்டு தயாரிக்கும் உணவு போதும்.
பாலைத்தனியாய்க் காய்ச்சி இனிப்பும் கூட்டி
பருகிடலாம். டீ காபி தேவையில்லை.” (ஞா.க.924)


இந்த உணவுத்திட்டம், பொதுவாக உலகில் எல்லா வெப்ப தட்ப நிலைக்கும் பொருந்தும். நேரத்தை மட்டிலும் ஆங்காங்குள்ள வெப்ப தட்ப நிலைகளுக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.
ஒவ்வொருவரும் நஞ்சை தானியம், புஞ்சை தானியம் இரண்டையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, உடல் உறுதிக்கும் அறிவின் நுட்பத்திற்கும் அவசியம் ஆகும்.


உணவின் வகைகள்


சத்துவ, ராஜஸ, தாமச உணவு என்ற மூவகை உணவு உண்டு. அதாவது, அமைதி தரும். இன்பம் தரும், துன்பம் தரும் உணவுகள். இம்மூவகை உணவுகளே மனிதருக்கு மூவகை குணங்களை உண்டாக்குகின்றன. அக்குணங்கள் சாத்வீகம், ரஜோ, தமோ ஆகியவையே ஆகும்.

Vegetables, Vegetable Basket, Harvest, Garden, Salad
உணவில் ஒழுங்கு


சாத்வீக, தாமச, ரஜோ உணவு


நாம் பிறந்தது முதல் இன்று வரை எந்த வகையான உணவு உட்கொண்டோமோ அந்த உணவினுடைய இரசாயனத் தன்மைக்கும், ஆற்றலுக்கும் தக்கவாறு உடல் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. உணவே தான் உடலாக மாறியிருக்கிறது. உணவில் பொருந்தும் உணவும், பொருந்தா உணவு என்ற இருவகை உண்டு. உண்ணும் உணவுக்குத் தக்கவாறு குணங்களும் வேறுபடும். இன்பத்தை அனுபவிக்கத் தூண்டுதல், ஊக்குவித்தல், இன்பம் அனுபவித்தில் இவையனைத்தும் ரஜோ குணத்தைச் சார்ந்தவையாகும். இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற எழுச்சியில் இன்பம் அளவுக்கு மீறித் துன்பமாக மாறும்போது தானாகவே தமோ குணமாக மாறி விடும். துடுக்கான செயல்கள், உணர்ச்சி வயப்பட்ட எண்ணங்கள், தீமை இழைப்பது இவையெல்லாம் தமோ குணத்தைச் சார்ந்தவை. தீமை தரும் எண்ணங்களும் செயல்களும் தமோ குணத்தினால் உண்டாகின்றன.


சாத்வீக குணமும், ரஜோ உணவை உண்பதால் ரஜோ குணமும், தாமச உணவை உண்பதால் தாமச குணமும் உண்டாகும். சாத்விக உண்வு அமைதியையும், தாமச உணவு துன்பத்தையும், ரஜோ உணவு இன்பத்தையும் தருகின்றன. உணவைக் கொண்டே முக்குணங்களும் உண்டாகின்றன.
தானியங்கள், காய்கறிகள், கீரைகள், பழவகைகள் முதலியன சாத்விக உணவுகள். இவை பொறுமை, அன்பு, இரக்கம், சகிப்புத்தன்மை போன்ற சாந்தமான நற்குணங்களை வளர்க்கும் தன்மையுடையன. இவ்வுணவுகளை யோக சாதனையாளர்களுக்கு உகுந்தவை; அமைதியைத் தருபவை.

Still Life, Vegetables, Container, Cereals, Peas
உணவில் ஒழுங்கு


புலால் வகைகள் மற்றும் ஏலம், கிராம்பு, மிளகாய் போன்ற உணவு வகைகள் ரஜோ உணவாகும். இவை தீய எண்ணங்களையும், முரட்டுத்தனமான செயல்களையும் தூண்டும்; நோய்களையும் உண்டாக்கும். பொதுவாகப் புலால் நீக்கிய உணவையே அருளாளர்கள் உண்ண வேண்டும்.
பீட்ரூட், காரட், டர்னீப், கருணைக்கிழங்கு தவிர்த்த பிற கிழங்கு வகைகள், காய்களில் சுரைக்காய், கனிகளில் குமட்டி (Water melon) போன்றவை மந்தத் தன்மையை அதாவது தாமச குணத்தைத் தருவனவாகும். இவற்றை அதிகமாக உட்கொண்டால் செயலார்வம், சுறுசுறுப்பு ஆகியன குறையும். சாத்விக குணங்களை உடையவராக இருக்க விரும்பும் ஒருவர் சாத்விக உணவையே உட்கொள்ள வேண்டும்.


பழங்கள் காய்கறிகளின் முக்கியத்துவம்


உணவில் அதிகமான அளவில் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தையும், நோய் எதிர்ப்பாற்றலையும், நோய் வந்தால் நலமாக்கும் திறனும் பச்சைக் காய்கறிகளுக்கு உண்டு. வெறும் தானிய வகைகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிப்பது இல்லை. எனவே தானியங்களோடு காய்கறி களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இனிப்புச் சுவையுடைய பழங்கள் (Sweet Fruits) உடலுக்கு வலுவையும், சக்தியையும் அளிக்கவல்லவை. பழங்கள் உடல் வெப்பத்தைத் தணித்து, செரிமான ஆற்றலை அதிகரிக்கின்றன.


காலத்தால் உண்ணல்


ஒவ்வொரு வேளை உணவும் காலத்தோடு உண்ண வேண்டியது அவசியமாகும். காலம் தவறி உண்பதால் உடல் நலத்திற்கு கேடு உண்டாகும்.

Breakfast, Healthy, Food, Diet, Fruit, Bowl, Organic
உணவில் ஒழுங்கு


உணவே மருந்து


முதற்காலத்தில் இந்திய பாரம்பரிய உணவு வகைகளில் பெரும்பாலும் உணவே மருந்தாகவும் இருந்து வந்தது. உதாரணமாக, நீரிழிவைத் தடுக்கும் குணம் வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தை வறுத்து பொடிசெய்து, குழம்புகளில் சேர்ப்பது என்ற பழக்கம் இருந்தது. வெந்தய இட்டிலி, வெந்தயத் தோசை, வெந்தயக் களி போன்றவற்றை உணவாகக் கொண்டனர். கடுக்காய்க்கு மலமிளக்கும் தன்மை உண்டு. கடுக்காய்ப் பிஞ்சைக் கொண்டு ஊறுகாய் செய்து உண்டு வந்தனர். உணவுப் பொருட்களில் உள்ள விஷத்தை நீக்குவதற்கு மிளகை உணவில் சேர்ப்பதுண்டு. மிளகு உடலுக்குத் தக்க வெப்பத்தை அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. சீரகம் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சுக்கு உடலிலுள்ள வாயுவைக் கட்டுப்படுத்துகிறது. பூண்டு இதயத் தசைகளில் தேங்கும் அதிகப்படியான கொழுப்பை நீக்கி, உடலைப் பாதுகாக்கிறது. மஞ்சள் உணவுப் பொருட்களில் உள்ள தீய கிருமிகளை அழிக்கிறது.

நன்றி! – பா.வைஷ்ணவி

நம்பிக்கை இல்லாத சமயத்தில் இதை கேள்! Click here

தேவையற்றதை தூக்கி எறி! Click here

beelive123

Chiselers Academy, One of the Best institute for E-Learning.Its mainly for UPSC and TNPSC aspirants.We all have certain dream in our life.some have a dream to Become a Doctor,Engineer,Lawyer,Teacher and etc.If you have a Dream to become and administrator like IAS.,IPS.,IRS.,we are here to show you the way to Know about it and achieve it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *